நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது - ஸ்கூட்டர்-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது - ஸ்கூட்டர்-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jun 2021 12:01 PM GMT (Updated: 12 Jun 2021 12:01 PM GMT)

நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர்- மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

திட்டச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திட்டச்சேரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 4 மோட்டார் ்சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் மோட்டார் சைக்கிள்கள்-ஸ்கூட்டரில் கொண்டு வந்த மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள்-ஸ்கூட்டரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா குந்தலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வம் மகன் செந்தமிழ்செல்வன் (21), அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜேஷ்குமார் (26), திருக்கண்ணமங்கை நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் கவியரசன் (22), மஞ்சக்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் முகேஷ் (24), தர்மகோவில் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் அசோக்குமார் (45), ஆணை தென்பாதி பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் பாபுராஜ் (28), அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சதீஷ்குமார் (28), திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூர் மேலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலு மகன் பிரகாஷ் (27) என்பதும். அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாராயம் மற்றும் மதுபானத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மூட்டை சாராயம் மற்றும் மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே தேவூர் கடைவீதி அருகில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கீழ்வேளூர் அருகே இலுப்பூர் தெற்குதெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் கலைமணி (34) என்பதும், இவர் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமணியை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல கானூர் சோதனை சாவடி வழியாக 4 மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்த மன்னார்குடி களப்பால் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் கண்ணதாசன் (34), தஞ்சை மேல மானோஜிப்பட்டியை சேர்ந்த பத்மநாபன் (40), திருவாரூர் அலிவலம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த கருணாபிரபு (40), திருவாரூர், பழவனங்குடி கருவேலி பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் சங்கர் (34) ஆகிய 4 பேரையும் கீழ்வேளூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story