பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர்
x
தினத்தந்தி 12 Jun 2021 6:01 PM IST (Updated: 12 Jun 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் முன்பு, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் நவ்ஷாத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டிப்பது. சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாணவரணி மாவட்ட தலைவர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல நாகை கோட்டைவாசல் படி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமை தாங்கினார். மனித உரிமை துறை மாவட்ட தலைவர் முகமது ரபீக், ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல பெருமாள் தெற்கு வீதியில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திர நாட்டார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் சுந்தர், மீனவர் அணி மாநில செயலாளர் விஜயகுமார் உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெரு, வள்ளுவர் சாலை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா செந்தில்குமார், வட்டார பொறுப்பாளர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சந்திரசேகரன், கோவிந்தராசு, அஷ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வைரம் தலைமை தாங்கினார்.இதில் காங்கிரஸ் கட்சியினர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல தோப்புத்துறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story