2-வது தவணை ரூ.2 ஆயிரம்-14 வகையான பொருட்கள் பெற - வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம்


2-வது தவணை ரூ.2 ஆயிரம்-14 வகையான பொருட்கள் பெற - வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 12 Jun 2021 8:38 PM IST (Updated: 12 Jun 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

2-வது தவணை ரூ.2 ஆயிரம்-14 வகையான பொருட்களை பெற வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும்மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது.

முதல்தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,185 ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 430 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. 2-வது தவணையாக இந்த மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3-ந் தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகிற 15-ந் தேதி முதல் 2-வது தவணை ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில் தினமும் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியும், மளிகைப்பொருட்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் எந்தந்த தேதியில் வந்து இவற்றை வாங்கி கொள்ளலாம் என டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த பணி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் வருகிற 15-ந் தேதி முதல் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது எனவும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வந்து பொருட்களையும், நிவாரண நிதியையும் பெற்று செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story