2 குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவை ரெட் கிராஸ் சங்கம் ஏற்கும். வேலூர் கலெக்டர் அறிவிப்பு


2 குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவை ரெட் கிராஸ் சங்கம் ஏற்கும். வேலூர் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 10:08 PM IST (Updated: 12 Jun 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவினால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் 2 குழந்தைகளின் கல்வி, மருத்துவசெலவை இந்திய ரெட்கிராஸ் சங்க வேலூர் மாவட்ட கிளை ஏற்கும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர்

குழந்தைகளுக்கு ஆறுதல்

வேலூர் தொரப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45), டாஸ்மாக் ஊழியர். இவருடைய மனைவி பாமா (38). இவர்களுக்கு திபேஷ்ராஜ் (9), பிரித்விராஜ் (7) என்று 2 மகன்கள் உள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சிவராஜ்-பாமா ஆகியோர் கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பெற்றோரை இழந்து ஆதரவு இன்றி 2 மகன்களும் தவித்து வந்தனர். 

அவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மூலம் இழப்பீடு தொகை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிவராஜின் 2 மகன்களையும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று நேரில் சந்தித்து தின்பண்டங்கள், பழங்கள், நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் சிவராஜ்-பாமா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கல்வி, மருத்துவ செலவை ஏற்கும்

பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளுக்கும்  மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித் தொகையும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்களை அளிப்பதாகவும், 2 குழந்தைகளின் கல்வி, மருத்துவம், அன்றாட தேவைகள், பண்டிகை காலத்தில் புத்தாடை, விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகள் வசிக்கும் வாடகை வீட்டிற்கு மாதந்தோறும் வாடகை ஆகியவற்றை இந்திய ரெட்கிராஸ் சங்க வேலூர் மாவட்ட கிளை ஏற்கும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகளின் சித்திக்கு நர்சிங் உதவியாளர் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

இதில், வேலூர் கோட்ட டாஸ்மாக் பொதுமேலாளர் கீதாராணி, இந்திய ரெட்கிராஸ் சங்க வேலூர் கிளை செயலாளர் பி.டி.கே. மாறன், பொருளாளர் உஷா நந்தினி, தலைவர் உதய சங்கர், மேலாளர் தீபன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story