தேயிலை தொழிற்சாலைகளில் விறகுகள் தட்டுப்பாடு


தேயிலை தொழிற்சாலைகளில் விறகுகள் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 12 Jun 2021 10:29 PM IST (Updated: 12 Jun 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தொழிற்சாலைகளில் விறகுகள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். 16 இன்கோசர்வ் தொழிற்சாலைகள், 6 டேன்டீ தொழிற்சாலைகள், 150-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிலும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நீலகிரியில் உள்ள தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

ஆரம்பத்தில் கொரோனா பரவல் காரணமாக சில தொழிற்சாலைகளில் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பச்சை தேயிலையை தேயிலைத்தூளாக உற்பத்தி செய்ய விறகுகள் இன்றியமையாதது. வழக்கமாக மேட்டுப்பாளையம், சேலம், நாமக்கல், சத்தியமங்கலம் போன்ற வெளியிடங்களில் இருந்து விறகுகள் மற்றும் கரும்பு சக்கைகள் லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படும். ஆனால் முழு ஊரடங்கால் வெளியிடங்களில் இருந்து விறகுகள் அதிகமாக கொண்டு வர முடியவில்லை. இதனால் சில தொழிற்சாலைகளில் விறகுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இருப்பு வைத்திருந்த விறகுகளை கொண்டு உற்பத்தி நடந்து வந்தது.

தொடர்ந்து தடையில்லாமல் தேயிலைத்தூள் உற்பத்தி செய்ய விறகுகள் தேவைப்படுகிறது. சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி உள்ளதால் வெளியிடங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும் ஊரடங்குக்கு முன்பு அடிக்கடி வாகனங்களில் கொண்டு வரப்படும். 

முழு ஊரடங்கால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி வாடகை கட்டணம் அதிகரித்து வருகிறது. இதனால் விறகுகள் குறைந்த அளவே தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.

Next Story