புதுக்கோட்டை நெடுவாசலில் மீண்டும் எரிவாயு எடுக்க முயற்சியா?


புதுக்கோட்டை நெடுவாசலில் மீண்டும் எரிவாயு எடுக்க முயற்சியா?
x
தினத்தந்தி 12 Jun 2021 5:40 PM GMT (Updated: 12 Jun 2021 5:40 PM GMT)

புதுக்கோட்டை நெடுவாசலில் மீண்டும் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை, ஜூன்.13-
புதுக்கோட்டை நெடுவாசலில் மீண்டும் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க இருப்பதாக மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தது. அப்போது நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்பட 8 மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயுக்கள் எடுக்கப்படமாட்டாது என்ற நிலை உருவானது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை எண்ணெய் கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்படாது என பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
எரிவாயு எடுக்க ஏலம்
இந்த நிலையில் மத்திய எரிசக்தி இயக்குனரகம் சார்பில் சிறு மற்றும் நடுத்தர வகை எண்ணெய் கிணறுகளில் எரிவாயு எடுக்க நாடு முழுவதும் 75 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே கருக்காகுறிச்சி வடதெரு பகுதியிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெடுவாசலில் ஏற்கனவே பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அப்பகுதியின் அருகே மீண்டும் எரிவாயு எடுக்க மத்திய அரசு முயற்சிப்பதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அறிவியல் இயக்கத்தினரும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி உள்ளனர்.
ரத்து செய்ய கோரிக்கை
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்கத்தினர் கூறுகையில், ``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்க கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை தான் மீண்டும் செயல்படுத்த மறைமுக முயற்சி தான் இது. வணிக ரீதியாக சாத்தியப்படாத இடங்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடங்களில் அரசால் கைவிடப்பட்ட இடத்தை வேறொரு திட்டத்தில் பெயரை மாற்றி செயல்படுத்த ஏலம் விட்டுள்ளனர். இதனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்'' என்றனர்.
இத்திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தகவல் வரவில்லை என்றனர்.

Next Story