இறந்தவரின் உடலை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் போராட்டம்


இறந்தவரின் உடலை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 11:23 PM IST (Updated: 12 Jun 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர் பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, போலீஸ் பாதுகாப்பையும் மீறி உடலை ஆட்டோவில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர் பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, போலீஸ் பாதுகாப்பையும் மீறி உடலை ஆட்டோவில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று இல்லை
மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 45). இவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த 4-ந் தேதி கொரோனா தொற்று அறிகுறியுடன் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சாதாரண படுக்கையில் இருந்து ஆக்சிஜன் படுக்கைக்கு மாற்றுவதற்காக ஊழியர்கள் சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி ஆக்சிஜன் படுக்கைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டனர்
தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல ஒப்படைக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவரது உடலை சுகாதார முறைப்படி எரியூட்ட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கூறியதால் அவரது உடலை சவக்கிடங்கிற்கு ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது வழிமறித்த உறவினர்கள் தொற்று பாதிப்பு இல்லாதவரின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதற்கு உடன்படாத உறவினர்கள் இறந்தவரின் உடலை போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல் சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

Next Story