பரிகார பூஜை நடத்துவதாக நகை மோசடி; கைதான கல்லூரி ஊழியருக்கு கொரோனா
கோவில்பட்டியில் பரிகார பூஜை நடத்துவதாக கூறி நகை மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான கல்லூரி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 44). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கோவில்பட்டி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அய்யனார் மனைவி பேச்சியம்மாளிடம், தங்க நகையை வைத்து பரிகார பூஜை செய்தால் குடும்ப பிரச்சினை தீரும் என்று கூறி கடந்த 7-ந் தேதி பூஜை நடத்தினார். அப்போது பேச்சியம்மாள் கொடுத்த 7 பவுன் தங்க நகையை கலசத்தில் வைத்திருப்பதாக கூறிய முத்துராமலிங்கம், அதை 40 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்படி கூறி சென்றார். அவ்வாறு பேச்சியம்மாள் கலசத்தை திறந்து பார்த்தபோது, நகை இல்லை. அப்போது தான் முத்துராமலிங்கம் பரிகார பூஜை நடத்துவதாக கூறி தன்னிடம் நகை மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதேபோல் முத்துராமலிங்கம் தன்னிடம் ½ பவுன் நகையை மோசடி செய்ததாக மாரியம்மாள் என்பவரும் புகார் கொடுத்தார். இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி முத்துராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் கோவில்பட்டி தனியார் கல்லூரி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, முத்துராமலிங்கம் மீது மேலும் 2 பெண்கள் புகார் செய்து உள்ளனர். அவர் பரிகார பூஜை நடத்துவதாக தன்னிடம் 2 பவுன் தங்க நகையை மோசடி செய்ததாக கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பாலமுருகன் மனைவி கற்பகவள்ளி கோவில்பட்டி கிழக்கு போலீசிலும், தன்னிடம் 5 பவுன் நகையை மோசடி செய்ததாக வில்லிசேரியை சேர்ந்த தங்கமாரிமுத்து மனைவி முருகலட்சுமி கயத்தாறு போலீசிலும் புகார் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story