ஜாமீன் கிடைத்தவர்களுடன் தவறுதலாக 2 கைதிகள் சிறையில் இருந்து விடுவிப்பு
சாராய வழக்கில் ஜாமீன் கிடைத்தவர்களுடன் தவறுதலாக 2 கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்:
22 பேருக்கு ஜாமீன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 22 பேருக்கு நேற்று அரியலூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கைதிகளை ஜாமீனில் வெளியே விடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகத்தினர் செய்தனர்.
தவறுதலாக விடுவிப்பு
அப்போது ஆங்கிலம் புரிதல் இல்லாத காரணத்தினால், கீழப்பழுவூர் அருகே உள்ள மலத்தாங்குளத்தை சேர்ந்த வேளாங்கண்ணி ராபர்ட் (வயது 36), பாலகுமார் (22) ஆகியோரை தவிர்த்து என்பதை தவறாக புரிந்து கொண்டு, அவர்கள் 2 பேரையும் சேர்த்து மொத்தம் 24 பேரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது கூடுதலாக 2 பேரை தவறுதலாக விடுவித்தது தெரியவந்தது. சாராய வழக்கில் கைதான அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் தவறுதலாக ஜாமீனில் அனுப்பப்பட்டுள்ளனர்.
தேடும் பணி தீவிரம்
இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி ராபர்ட், பாலகுமார் ஆகியோரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாராய வழக்கில் ஜாமீன் கிடைத்தவர்களுடன் தவறுதலாக 2 கைதிகள் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story