கொரோனா தடுப்பூசி முகாமில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூர்:
தடுப்பூசி போடும் பணி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு இலவசமாக கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியிருந்தது. ஏற்கனவே முன்களப்பணியாளர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலினால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுவதால் முகாமில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
3,890 பேருக்கு தடுப்பூசி
நேற்று முன்தினம் கையிருப்பில் இருந்த கோவாக்சின் தடுப்பூசி மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முகாமிற்கு தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டு, தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதனால் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் கூட்டம் அலைமோதியது. இதில் பலர் காத்திருந்து தடுப்பூசி போட்டுச்சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 803 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 87 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story