தென்காசிக்கு 6,400 தடுப்பூசிகள் வந்தன; சமூக இடைவெளியை மறந்து குவிந்த பொதுமக்கள்


தென்காசிக்கு 6,400 தடுப்பூசிகள் வந்தன; சமூக இடைவெளியை மறந்து குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Jun 2021 1:19 AM IST (Updated: 13 Jun 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்துக்கு 6,400 தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. இதனை செலுத்துவதற்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்தனர்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்திற்கு நேற்று 6,400 தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. இதனை செலுத்துவதற்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்தனர்.

2-வது டோஸ்

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தடுப்பூசிகள் வராததால் யாருக்கும் போட முடியவில்லை. பல இடங்களில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பொதுமக்கள் வந்து தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தென்காசி மாவட்டத்திற்கு கோவி ஷீல்டு தடுப்பூசிகள் 5,900-மும், கோவேக்சின் 500-ம் வந்து சேர்ந்தன. இவை அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படுவதாக தகவல் அறிந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டனர். தென்காசி காட்டுபாவா பள்ளியில் கோவேக்சின் இரண்டாவது டோஸ் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. அங்கு முதல் டோஸ் செலுத்த வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தடுப்பூசிகள் வீணாகவில்லை

மொத்தம் மாவட்டம் முழுவதும் நேற்று 7,538 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசிகள் எதுவும் வீணாகவில்லை என்றும் அதனால் தென்காசி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த 6,400 தடுப்பூசிகளை 7,538 பேருக்கு செலுத்தினோம் என்று சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறினார்.

தென்காசி அருகே உள்ள இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை 9 மணியில் இருந்து பொதுமக்கள் குவிந்தனர். அவர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு டோக்கன்கள் வழங்கப்பட்டு வரிசையாக செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இடையிடையே வந்த சிலருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதால் வரிசையாக நின்றவர்கள் தங்களுக்கு கிடைக்காதோ என்ற எண்ணத்தில் மொத்தமாக உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அப்போது தடுப்பூசி போடப்படும் இடத்தின் கதவு அடைக்கப்பட்டது. அந்த இடத்தில் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் கூடி நின்றனர். அங்கு வரிசைப்படுத்த நின்ற போலீசாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு சமூக இடைவெளி இல்லாமல் இருந்தால் நோய்த்தொற்றை எப்படி தடுக்க முடியும்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

முன் களப்பணியாளர்கள்

இதுகுறித்து இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வி கூறுகையில், காலையில் அனைவரையும் சமூக இடைவெளியில் இருக்க வேண்டும் என்று கூறி டோக்கன்கள் வழங்கினோம். இடையிடையே முன் களப்பணியாளர்கள் வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் உள்ளது. பொதுமக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்கள் சமூக இடைவெளி இல்லாமல் நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அதிக தடுப்பூசிகள் வேண்டும்

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “தடுப்பூசி எந்த இடங்களில் போடப்படுகிறது என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. இதுகுறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும், வரிசையாக டோக்கன்கள் கொடுத்து டோக்கன்கள் பெறாதவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேறச் செய்ய வேண்டும், இடையிடையே தங்களுக்கு வேண்டியவர்களை அதிகாரிகள் உள்ளே அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும், தென்காசி மாவட்டத்திற்கு அதிகமான தடுப்பூசிகள் அரசு வழங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

சிவகிரி

சிவகிரி பஸ் நிலையம் அருகே தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகிரி நகரப் பஞ்சாயத்தும், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மையமும் இணைந்து நடத்திய இந்த முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய், நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர்.
சுகாதார ஆய்வாளர்கள் சரபோஜி, விஷ்ணு குமார், நவராஜ், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் லியோ தலைமையிலான மருத்துவ குழுவினர் மொத்தம் 166 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கம்புகளை வைத்து அடைத்தனர். சிவகிரி நகரப் பஞ்சாயத்து சார்பாக குழு பணியாளர்கள் மூலமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story