குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?
x

மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
கல்குவாரி 
 விருதுநகர் மாவட்டத்தில் எப்போதுமே குடிநீர் பிரச்சினை என்பது நிரந்தரமாக நிலவி வரும் நிலையில் இதற்கு தீர்வுகாண உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.
 விருதுநகர் நகராட்சி பகுதியில் தற்போது குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் 10 முதல் 12 நாட்களாக உள்ளன. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து ஓரளவு குடிநீர் கிடைத்து வந்தாலும் நிலத்தடி நீர் ஆதாரமான ஆனைகுட்டத்தில் இருந்து கிடைக்கும் குடிநீர் அளவு குறைவாக உள்ளதால் குடிநீர் இடைவெளி நாட்களை குறைக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மற்றொரு நீர் ஆதாரமான ஒண்டிப்புலி கல்குவாரியில் தற்போது 17 அடி தண்ணீர் உள்ள நிலையிலும், காரிசேரி கல்குவாரியில் 7 அடி தண்ணீர் உள்ள நிலையிலும் அங்கு இருந்தும் தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையிலும் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தவிர்க்க முடியாததாக உள்ளது.
குடிநீர் பிரச்சினை 
வழக்கமாக கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடமிருந்து தேவையான நிதியினை பெற்று அதனை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது வாடிக்கையாகும்.
 ஆனால் தற்போதைய நிலையில் இந்த நடைமுறை பின்பற்றப்படாத நிலையில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. ஏற்கனவே அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.436 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க பெற்றாலும் பணிகள் முழுவீச்சில் நடைபெறாத நிலை நீடிக்கிறது.

நடவடிக்கை
 இந்த பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது உடனடி தேவையாகும். மேலும் விருதுநகரில் குடிநீர் வினியோகம் சீராக இருக்க ரூ.21 கோடியிலான புனரமைப்புத்திட்டம் செயல்படுத்த வேண்டியது அவசியம் என பலமுறை வலியுறுத்தியும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 எனவே இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மேலும் கிராம பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் இன்னும் முழுமையாக சீராக இல்லாத நிலை உள்ளது. இதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வலியுறுத்தல் 
மேலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் பெறுவதில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. 
 எனவே மாவட்ட அமைச்சர்கள் இங்கு நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண மாவட்ட நிர்வாகம உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடமிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story