கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து-வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை


கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து-வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 2:11 AM IST (Updated: 13 Jun 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உரங்கள் இருப்பு
நடப்பு கார் மற்றும் காரீப் பருவத்திற்கு தேவையான 4,676 மெட்ரிக் டன் யூரியா, 2343 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,278 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,761 மெட்ரிக் டன் காம்பளக்ஸ் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
டி.ஏ.பி., உர மூட்டையின் அதிகபட்ச விலை ரூ.1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் போது, உர விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கடையின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே, உரம் விற்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகள் உரிய விற்பனை பட்டியலை, கேட்டு பெற வேண்டியது அவசியம் ஆகும்.
உரிய ரசீது
மேலும் சில்லரை விற்பனையாளர்கள் அனைவரும் தகவல் பலகையில், உரங்களின் இருப்பு, விலை விபரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உரங்களின் இருப்பு பதிவேடு பராமரிப்பு, விற்ற உரங்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்யும் உர நிலையங்கள் மீது விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story