கும்மிடிப்பூண்டி அருகே நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் அமைச்சர் திடீர் ஆய்வு கூடுதல் வசதிகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசின் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. சுமார் 137 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட இந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து துறையுடன், வருவாய்த்துறை, போலீஸ், மதுவிலக்கு, பொது சுகாதாரம், கால்நடை, வனத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி இந்த சோதனைச்சாவடி தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பெரும்பாலான துறைகள் முழுமையாக இன்னும் செயல்பட துவங்கவில்லை.
தமிழகத்துடன் வடமாநிலங்களையும், ஆந்திராவையும் இணைக்கும் இந்த ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், மோட்டார் வான ஆய்வாளர் ராஜன், தாசில்தார் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
போக்குவரத்து துறையில் அரசிற்கான வருவாய் பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு எந்த மாதிரியான கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறது? சோதனைச்சாவடி வளாகத்தில் காலியாக உள்ள கடைகளை திறப்பது தொடர்பாகவும் அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கும்மிடிப்பூண்டியில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகர போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்குவதற்கும், கும்மிடிப்பூண்டி பஜார் வழியே அனைத்து அரசு மற்றும் தனியார் அரசு பஸ்களை முறையாக இயக்குவது தொடர்பாகவும் கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் அளித்தார்.
Related Tags :
Next Story