பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 13 Jun 2021 12:02 PM IST (Updated: 13 Jun 2021 12:02 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர், போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்தபோது, அங்கு பயின்ற ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகளுக்கு பிறகு அளிக்கப்பட்ட புகாரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கெபிராஜை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல் நாளான நேற்று அண்ணாநகரில் அவர் நடத்திவரும் கராத்தே பயிற்சி பள்ளிக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டுக்கும் அழைத்துச் சென்று அவருடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் உள்ள ‘ஹார்ட் டிஸ்க்’ ஒன்றையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது அவர்களிடம் எதுபோன்று நடந்து கொள்வார்? என்பது குறித்து இங்கு பயிற்சி பெற்ற மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கெபிராஜை மீண்டும் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story