விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்து வீடு வீடாக குப்பை சேகரிக்க திட்டம் சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு


விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்து வீடு வீடாக குப்பை சேகரிக்க திட்டம் சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
x
தினத்தந்தி 13 Jun 2021 12:07 PM IST (Updated: 13 Jun 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் விசில் சத்தத்துக்கு பதிலாக, இனி விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்து வாகனங்களில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளின் அளவு குறைந்துள்ளது.

இவ்வாறு பெறப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் மற்றும் மீத்தேன் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்தவகையில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, குப்பைகளை தரம் பிரித்து பெறப்படுகின்றது.

மேலும், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வண்டி வந்திருப்பதை விசில் சத்தம் எழுப்பி அழைக்கின்றனர். அப்போது முககவசத்தை கழட்ட வேண்டியுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக குப்பை சேகரிக்கும் ஊழியர்கள் விசில் சத்தத்திற்கு பதிலாக ‘ஹாரன்’ சத்தம் எழுப்பி குப்பை சேகரிக்கும் முறையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், பல்வேறு வாகன ‘ஹாரன்’ சத்தங்களால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடும்.

அதனால், விசில் சத்தத்திற்கு பதிலாக, குப்பை குறித்த விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும், பொது இடத்தையும், வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடலுடன் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

‘தூய்மையான நாடு’, ‘தூய்மையான வீடு’

இந்த பாடலில், குப்பையை பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மை, மக்கும், மக்காத குப்பை எவை?, குப்பை சேகரிக்க வருவோரை மரியாதையாக நடத்துவது, வீட்டையும், பொது இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற அம்சங்களுடன் ‘தூய்மையான நாடு’, ‘தூய்மையான வீடு’, என்ற கருப்பொருளை மையப்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட்டு குப்பை சேகரிக்கும் வண்டிகளில் இந்த பாடல் ஒலிக்கும். இந்த பாடலை வைத்து குப்பை வண்டி வருகிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். பாடல் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். துப்புரவு ஊழியர்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story