தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்


தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2021 3:50 PM IST (Updated: 13 Jun 2021 3:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எல்.முருகன் வலியுறுத்தல்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு 2 ஆக்சிஜன் செரியூட்டும் எந்திரங்கள், 5 படுக்கைகள், டாக்டர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர் உள்பட 100 பேருக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.வேல்முருகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வலியுறுத்தியது போல் ஆளுங்கட்சியாக ஆகியும் மின் கட்டணத்தை ரத்து செய்யவில்லை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மாநில வரியை ரத்து செய்யவில்லை, தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதை தரவில்லை என்று கூறினார்.

மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதன் மூலம் அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும். தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்து விவரம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கோவில்களில் ஆகமவிதிகள் தெரிந்தவர்கள் தான் அர்ச்சகராக வேண்டும் என்பது எனது கருத்தாகும் என அவர் கூறினார்.

Next Story