நாகையில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு


நாகையில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jun 2021 11:58 AM GMT (Updated: 13 Jun 2021 11:58 AM GMT)

நாகையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை ஆரியநாட்டுதெருவைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கும், மீனவ பஞ்சாயத்தார்களை தேர்வு செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில் நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரியநாட்டுதெரு மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் நகுலன்(வயது30) என்பவர் மகாலட்சுமி நகர் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் நகுலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். உடனே அருகில் இருந்தவர்கள் நகுலனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற வருகிறார்.

3 பேர் கைது

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரியநாட்டுதெருவைச் சேர்ந்த தர்மபாலன்(62), அருண்குமார்(33), பிரபாகரன் (39)ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் தர்மபாலன் உறவினர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மகாலட்சுமி நகரில் நடந்த கபடி போட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. ஆனால் வெளிப்பாளையம் போலீசார் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தர்மபாலன் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர். எனவே அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்வ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

Next Story