தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு


தூத்துக்குடியில்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு
x
தினத்தந்தி 13 Jun 2021 6:29 PM IST (Updated: 13 Jun 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் 69 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் 69 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசும் போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்தான் பொதுமக்களோடு இணைந்து களப்பணியாற்றுகிறீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வின் அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்படும். ஆகையால் நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.

நீங்கள் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்று பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் வர வேண்டும். அதற்காக தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எந்தவித காலதாமதமும் இருக்க கூடாது. பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

69 பேர்

கூட்டத்தில், ஒரு ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 69 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாறுதல் கோரி பங்கேற்றனர். தொடர்ந்து ஒவ்வொருவராக அழைத்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ் (தூத்துக்குடி நகரம்), பொன்னரசு (ஊரகம்), சங்கர் (மணியாச்சி), கலைக்கதிரவன் (கோவில்பட்டி), பிரகாஷ் (விளாத்திகுளம்), காட்வின் ஜெகதீஷ்குமார் (சாத்தான்குளம்), தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டி, உமையொருபாகம், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story