பேரணாம்பட்டு அருகே ஏரி தண்ணீரில் விஷம் கலப்பு; மீன்கள், பறவைகள் செத்து மிதந்தன
பேரணாம்பட்டு அருகே ஏரிதண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் மற்றும் பறவைகள் செத்து மிதந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு
ரெட்டிமாங்குப்பம் ஏரி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் ராஜக்கல் ஊராட்சியில் உள்ள ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை கட்டுபாட்டின் கீழ் சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களுக்கு நீராதாரமாகவும், விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த ஏரிக்கு அரிய வகை வெளிநாட்டு பறவைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் இங்கு தண்ணீர் அருந்துகின்றன. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரெட்டி மாங்குப்பம் ஏரியில் மீன் வளர்ச்சித் துறை மூலம் ரூ.78 ஆயிரத்திற்கு மீன்கள் வளர்க்க ஏலம் விடப்பட்டு 25 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.
செத்து மிதந்த மீன்கள்
அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீன் வளர்க்க ஏலம் எடுத்த தரப்பினருக்கும், மீன்களை பிடித்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் மீன் வளர்க்க ஏலம் எடுத்த நந்தகுமார் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெட்டிமாங்குப்பம் ஏரியில் யாரோ விஷமிகள் மாட்டு இறைச்சியில் விஷத்தை கலந்து ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். இதனால் ஏரியில் வளர்க்கப்பட்டு வந்த மீன்கள், மற்றும் பாம்பு, பறவைகள், கொக்குகள் இறந்து மிதந்தன. இதனை கண்ட ரெட்டிமாங்குப்பம் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முன்விரோதம் காரணமா?
இது குறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மாட்டு இறைச்சியில் விஷத்தை கலந்து ஏரியில் வீசியது யார்? முன்விரோதம் காரணமாக வீசினார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் தண்ணீர் குடித்த ஆடு, மாடுகள் கதி என்னவாகுமோ? என பொதுமக்கள், விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story