காற்றுக்கு வேலியாகவும் கால்நடைகளுக்குத் தீனியாகவும் பயன்படக்கூடிய சவுண்டல் மரங்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காற்றுக்கு வேலியாகவும் கால்நடைகளுக்குத் தீனியாகவும் பயன்படக்கூடிய சவுண்டல் மரங்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி,
காற்றுக்கு வேலியாகவும் கால்நடைகளுக்குத் தீனியாகவும் பயன்படக்கூடிய சவுண்டல் மரங்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உணவுத் தேவை
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே மரங்களைச் சார்ந்ததாகவே அவர்களுடைய வாழ்க்கை முறை இருந்துள்ளது. அதனால் தான் மரங்களைத் தெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மேலும் ஆரம்பகாலங்களில் பூ, காய், பழம் என்று உணவுத் தேவைக்காக மட்டும் பயன்பட்ட மரங்கள் இருப்பிடம், எரிபொருள் என்று மனிதர்களின் பலவகைப் பயன்பாட்டுக்கானதாக மாறிவிட்டது. அத்துடன் கால்நடை வளர்ப்பில் மனிதர்கள் ஈடுபட்டபோது அவற்றின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் கைகொடுத்ததும் மரங்களேயாகும்.
அந்தவகையில் உடுமலை பகுதியில் மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்பில் வேலிப்பயிராக சவுண்டல் மரம் வளர்த்து கால்நடைகளின் தீவனத் தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கவலையில்லாத கால்நடை வளர்ப்புக்கு கைகொடுக்கக் கூடிய ஒரு தீவனப்பயிர் உண்டென்றால் அது சவுண்டல் மரங்கள் என்று சொல்லலாம். மரவகைப்பயிரான இதற்கு சூபா புல் என்று புல் வகைப் பெயர் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.
காற்றுத் தடுப்பான்
பொதுவாக கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனங்களை அதிக அளவில் கொடுப்பதன் மூலமே பால் உற்பத்தியைப் பெருக்க முடியும். இதற்கென பெரும்பாலான விவசாயிகள் விளைநிலங்களில் ஒரு பகுதியை ஒதுக்கி குதிரை மசால், முயல் மசால், நேப்பியர் புல் போன்ற தீவனப் பயிர்களை வளர்ப்பார்கள். ஆனால் விளைநிலத்தில் இடம் ஒதுக்காமலேயே தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் இருப்பது சவுண்டல் மரங்களாகும்.
வேலியோரத்தில் இதன் விதைகளை நட்டு வைத்து 3 நாட்கள் தண்ணீர் ஊற்றினால் போதும். அதன்பிறகு தானாகவே வளரத்தொடங்கி விடும். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய இந்த மரங்கள் காற்றுத் தடுப்பானாக செயல்படுகிறது. இதனால் பழ மரங்களில் பூ, பிஞ்சு உதிர்வதைத் தடுக்க முடியும். மேலும் அனைத்து வகைப் பயிர்களிலும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களை அரணாக நின்று சவுண்டல் மரங்கள் தடுக்கிறது.
55 ஆண்டுகள் பலன்
வேலிப்பயிராக நடப்படும் சவுண்டல் மரங்கள் உயிர்வேலியாக செயல்படுவதால் பிரதானப்பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் குறைகிறது. மேலும் இதன் வேர்கள் பரவலாக உள்ளதால் மண் அரிப்பைத் தடுக்கிறது. சவுண்டல் மரங்களில் ஆறு மாதங்களிலிருந்தே அறுவடையைத் தொடங்கலாம். இருந்தாலும் வறட்சியான பகுதிகளில் 2 வருடம் வரை வளர விட்டு அதன் வேர்ப்பகுதி மண்ணில் ஆழமாக ஊன்றிய பிறகு அறுவடை செய்வது நல்லது. ஒரு ஏக்கரில் சவுண்டல் வளர்த்தால் 16 ஆயிரம் கிலோ தீவனம் பெற முடியும். வறண்ட பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் பசுந்தீவன உற்பத்தி செய்யக்கூடியது சவுண்டல் மரங்கள் என்பதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபாடுள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் இதனை வளர்க்கலாம். ஒரு முறை நடவு செய்தால் 55 ஆண்டுகள் வரை பயன் தரக்கூடியதாக சவுண்டல் உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
==============
தெய்வீக மரம்
காய், விதை, கொழுந்து என்று அனைத்தும் பயன் தரக்கூடிய சவுண்டல் மரம் வியட்நாம் நாட்டில் தெய்வீக மரமாகப் போற்றப்படுகிறது. இதன் இலைகள் கால்நடைத் தீவனமாக மட்டுமல்லாமல் இயற்கை உரத்தயாரிப்பிலும் பயன்படுகிறது. சுவீடன், அமெரிக்கா, பின்லாந்து நாடுகளில் மின் உற்பத்தியில் சவுண்டல் மரங்களின் பங்களிப்பு உள்ளது.
சீமைக்கருவேல மரங்களுக்கு மாற்று
ஏரி, குளம், ஓடை மட்டுமல்லாமல் விளை நிலங்களிலும், வீதிகளிலும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலும் எழுப்பப்படுகிறது. அதேநேரத்தில் சிக்கன எரிபொருள், மண் அரிப்பைத் தடுப்பது என்று சில வகைகளில் மக்களுக்கு உதவி வரும் சீமைக் கருவேல மரங்களுக்கு மாற்றாக பன்முகத் தன்மை கொண்ட ஒரு மரத்தை நட்டு வளர்க்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் விறகாக மட்டுமல்லாமல் காகிதக்கூழ் தயாரிக்கவும் பயன்படும் சவுண்டல் மரங்களை நட்டு வளர்க்கலாம். பலகை உற்பத்திக்கும் பயன்படுவதால் இதனை ஏழைகளின் தேக்கு என்றும் சொல்லலாம். பராமரிப்பில்லாமல் பல்கிப் பெருகி வளர்ந்தாலும் இதன் பலனும் பல மடங்காகப் பெருகுமே தவிர தீங்கு விளைவிக்காது என்பதால் சீமைக் கருவேல மரங்களை அகற்றி விட்டு அந்த இடங்களில் சவுண்டல் மரங்களை நடும் இயக்கத்தை அரசும் தன்னார்வலர்களும் தொடங்கலாம்.
Related Tags :
Next Story