டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லில் பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் ஒய்.எம்.ஆர்.பட்டி ஆர்த்தி தியேட்டர் சாலையில் உள்ள அவருடைய வீடு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பின்னரே டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பழனியில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். மேலும் ஆயக்குடி, பாலசமுத்திரம் ஆகிய இடங்களிலும் பா.ஜ.க.வினர் தங்களது வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் வேடசந்தூர், நிலக்கோட்டை என மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story