திருச்செந்தூர் அருகே 500 கிலோ புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது


திருச்செந்தூர் அருகே  500 கிலோ புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2021 9:24 PM IST (Updated: 13 Jun 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே 500 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே 500 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

திருச்செந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பதுங்கி கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான போலீசார் திருச்செந்தூர் அருகே உள்ள எள்ளுவிளை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

புகையிலை பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவர் ஸ்ரீவைகுண்டம் பேரூர் சன்னதி தெருவை சேர்ந்த முருகன் (வயது 41), சாத்தான்குளம் அறிவான்மொழி மேற்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேசபெருமாள் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அந்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 500 கிலோ புகையிலையையும், வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
மேலும் இந்த புகையிலை நெல்லை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். 

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story