குடையுடன் வந்தால் மட்டுமே மதுபானம்


குடையுடன் வந்தால் மட்டுமே மதுபானம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:04 PM IST (Updated: 13 Jun 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் குடையுடன் வந்தால் மட்டுமே மதுபானம் கொடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி: 

தேனி மாவட்டத்தில் மொத்தம் 93 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட இந்த கடைகள் இன்று (திங்கட்கிழமை)திறக்கப்பட உள்ளன. 

இதனால் டாஸ்மாக் கடைகள் முன்பு சமூக இடைவெளியுடன் நின்று மதுபானம் வாங்கிச் செல்வதற்காக கம்புகளை கட்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குடையுடனும் வரவேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடையின் முன்பு வரையப்பட்டுள்ள வட்டத்தில் வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும். 

ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 மதுபான பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அரசின் விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story