கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசங்களை முறையாகக் கையாள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசங்களை முறையாகக் கையாள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 13 Jun 2021 10:07 PM IST (Updated: 13 Jun 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசங்களை முறையாகக் கையாள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசங்களை முறையாகக் கையாள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா அரக்கன்
பிறப்பைக் கொண்டாட முடியவில்லை. இறப்புக்காகக் கண்ணீர் விட முடியவில்லை. நெருங்கிய சொந்தங்களைக் கூட விலகி நிற்க வைத்த கொடுமை கொரோனாவால் வந்தது. ஒட்டு மொத்த உலகமும் கொரோனா என்னும் கொடூர வைரசின் கோர தாண்டவத்தில் உறைந்து கிடக்கிறது. 
சில நிமிட ஆட்டத்தில் பல ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கும் பூகம்பம், சுனாமி, சில மாதங்களில் உயிரிழப்புகளை உருவாக்கும் வறட்சி, பஞ்சம் இவை எல்லாவற்றையும் தாண்டி பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியும் இன்னமும் வெறி அடங்காமல் உலா வந்து கொண்டிருக்கிறான் கொரோனா அரக்கன். இவனிடம் சிக்காமல் தப்பிப்பதற்கு அரசு பல்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. 
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அதில் முக்கிய இடத்தில் இருப்பது முக கவசம் அணிவதாகும். இந்த நிலையில் முக கவசம் அணிவதிலும் அவற்றை அப்புறப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்று பாதித்தவர்கள் இருமும் போதோ, தும்மும் போதோ அல்லது பேசும் போதோ தெறிக்கும் நீர்த்திவலைகள் காற்றில் பயணம் செய்து நமது மூக்கையோ, வாயையோ அடைவதை முக கவசங்கள் தடுக்கிறது. இதன்மூலம் தொற்றிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். பொது வெளிகளில் முக கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால் அதை எப்படி அணிகின்றனர் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
தரமான முக கவசங்கள்
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரே முக கவசத்தை அணிந்து காட்டி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஆனாலும் பலர் தாடைகளிலும், மூக்குக்கு கீழேயும் முக கவசம் அணிகின்றனர். போலீசாரைப் பார்த்ததும் அவசரம் அவசரமாக அதனை மேலே ஏற்றி விடுகின்றனர். நாம் முக கவசம் அணிவது போலீசாருக்காக இல்லை. நமக்காக என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தரமான முக கவசங்கள் மட்டுமே தொற்று பரவலை தடுக்கும் என்பதை உணர்ந்து முக கவசங்களை வாங்குங்கள். 
அவற்றை வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் கண்டிப்பாக அணியுங்கள். தள்ளுவண்டியில் காய்கறிகள் வாங்குவதற்காக பெண்கள் வெளியே வந்தாலும், குப்பை வண்டியில் குப்பைகளை கொட்டுவதற்காக வந்தாலும் என வீட்டு வாசலைத் தாண்டினாலே முக கவசம் அணிந்து வெளியே வருவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். மேலும் தற்போதைய சூழ்நிலையில் நமது வீட்டுக்குள் மற்றவர்களை அனுமதிப்பதை தவிருங்கள்.
வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்காதீர்கள்
 தவிர்க்க முடியாத நிலையில் அனுமதித்தாலும் வீட்டுக்குள்ளேயே நாம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெளியேறியதும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்யுங்கள். எனது நெருங்கிய நண்பர், எனது நெருங்கிய உறவினர், என்னோடு பணியாற்றுபவர், பக்கத்துக்கு வீட்டுக்காரர் இவர்களோடு பேசும்போது நான் ஏன் முக கவசம் அணிய வேண்டும் என்பது பலருடைய கேள்வியாக உள்ளது.
நீங்கள் யார், அவர்கள் யார் என்பது குறித்து கொரோனா வைரஸ் கவலைப்படுவதில்லை. பாரபட்சமில்லாமல் அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் பலரிடம் பரவலாக ஒரு பழக்கம் உள்ளது. அருகில் சென்று பேசத் தொடங்கும் போது முக கவசத்தை கீழே இறக்கி விட்டுக்கொள்கிறார்கள்.
அப்புறப்படுத்துவதில் அலட்சியம்
அத்துடன் ஒரு சிலர் தும்மும்போதோ, இருமும்போதோ முக கவசத்தில் சளி படிந்து விடக்கூடாது என்பதற்காக இறக்கி விட்டுக் கொள்கிறார்கள். மேலும் பலர் முக கவசத்தை சுருட்டி கைகளுக்குள்ளோ அல்லது பைகளுக்குள்ளோ வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து அணிந்து கொள்கிறார்கள். 
முக கவசத்தில் காதுகளில் மாட்டும் பகுதியைத் தவிர எந்த பகுதியிலும் கைகள் படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிலர் பல நாட்களாக ஒரே முகக்கவசத்தை அணிவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். இது கிருமிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போன்ற செயலாகும். 
இதுபோன்ற தவறான செயல்கள் முக  கவசம் அணிவதற்கான அடிப்படையையே தகர்க்கும் செயலாகும். எல்லாவற்றுக்கும் மேலாக முக கவசங்களை அப்புறப்படுத்துவதில் காட்டப்படும் அலட்சியம் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 
வீதியில் எறிகிறார்கள்
பலரும் தாங்கள் அணிந்த முக கவசங்களை வீதிகளில் வீசி செல்வதை காண முடிகிறது. இதனால் வீதியெங்கும் பயன்படுத்தி  தூக்கி எறிந்த முக கவசங்கள் பரவிக்கிடக்கிறது. இந்த முக கவசங்களை சில வேளைகளில் நாய்கள் கடித்து விளையாடுகிறது. 
சில வேளைகளில் குழந்தைகள் இதன் ஆபத்தை உணராமல் எடுத்து விளையாடும் அபாயம் உள்ளது. எனவே முக கவசங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன் முறையாக அப்புறப்படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story