விற்பனை செய்ய முடியாததால் குப்பையில் கொட்டப்படும் கொய்மலர்கள்
விற்பனை செய்ய முடியாததால் குன்னூரில் கொய்மலர்கள் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
குன்னூர்
விற்பனை செய்ய முடியாததால் குன்னூரில் கொய்மலர்கள் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
கொய்மலர் சாகுபடி
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கொய்மலர் சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகளுக்கு அரசு மூலம் பயிற்சியும், வங்கி கடனும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குன்னூர் பகுதியில் விவசாயிகள் வங்கி கடன் பெற்று கார்ணேசன், ஜெர்பரா, வில்லியம், ஹைட்ரோஜா உள்ளிட்ட கொய்மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட இந்த மலர்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
குப்பையில்...
தற்போது கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த கட்டுபாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொய்மலர்களை வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டாததால், விற்பனை முற்றிலுமாக குறைந்தது.
இதன் காரணமாக ரூ.25 லட்சம் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட கொய்மலர்கள் விற்பனை செய்ய முடியாமல் நிலை உள்ளது. மேலும் கொய்மலர்களை அறுவடை செய்து நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அழுகும் நிலை உள்ளதால், அவற்றை விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். எனவே கொய்மலர் விவசாயிகளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதுகுறித்து கொய்மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு விவசாயிகள் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக மலர்கள் விற்பனையில்லாமல் தேக்கமடைந்தது.
இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஒரு சில விவசாயிகள் சிரமத்திற்கு மத்தியில் கொய்மலர் சாகுபடி செய்தனர். ஆனால் இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் திருமணம், திருவிழாக்கள் நடக்காததால், கொய்மலர்கள் விற்பனை ஆவதில்லை.
இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கொய்மலர்கள் அழுகி வருவதால் குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொய்மலர் விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க முன் வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story