கார் மோதி போலீஸ்காரர் பலி


கார் மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 11:25 PM IST (Updated: 13 Jun 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

குன்றக்குடி அருகே கார் மோதி போலீஸ்காரர் பலியானார்.

காரைக்குடி,

குன்றக்குடி அருகே கார் மோதி போலீஸ்காரர் பலியானார்.

போலீஸ்காரர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 34). இவர் சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கோட்டையூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வினாத்தாள் வைத்துள்ள அறையை பாதுகாக்கும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்காக இரவு பணியிலிருந்த போலீஸ்காரரை காலை 8 மணிக்கு பணிமாற்றம் செய்யும் பொருட்டு நேற்று காலை ராஜா வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கோட்டையூர் நோக்கி சென்றார்.

கார் மோதி பலி

குன்றக்குடி ஆவுடைப்பொய்கை அருகே காரைக்குடி-திருச்சி பைபாஸ் ரோட்டில் திரும்பிச்சென்ற போது, திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குன்றக்குடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ராஜா உடலை மீட்டு பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான போலீஸ்காரர் ராஜாவுக்கு மனைவியும், 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர். விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த தேவகோட்டை நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story