பெற்ற குழந்தையை அனாதை என அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்த மதுரை வாலிபர்


பெற்ற குழந்தையை அனாதை என அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்த மதுரை வாலிபர்
x
தினத்தந்தி 13 Jun 2021 11:30 PM IST (Updated: 13 Jun 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

மனைவி பிரிந்து சென்றதால், தனது குழந்தையை அனாதை என அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்து நாடகமாடிய மதுரை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

மனைவி பிரிந்து சென்றதால், தனது குழந்தையை அனாதை என அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்து நாடகமாடிய மதுரை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அனாதை என ஒப்படைப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூருக்கு காரில் சென்ற போது வழியில் திருப்பாச்சேத்தி சாலையோரத்தில் 6 மாத பெண் குழந்தை அனாதையாக கிடந்தது எனக் கூறி 2 வாலிபர்கள் கடந்த 11-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்கள் தங்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம் என மருத்துவமனையில் தகவல் தெரிவித்தனர். இந்தக் குழந்தை குறித்து மருத்துவமனையினர் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் சைமன் சார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துவேறுபாடு

விசாரணையில், அந்த குழந்தையின் தந்தையான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள எருமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்ற ஆனந்தகுமார் (வயது 35) என்பவரே அந்த குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் அனாதை எனக் கூறி நாடகமாடி மருத்துவமனையில் ஒப்படைத்தது தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து குழந்தையின் தந்தை ஆனந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தகுமார், சுபாஷினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர். பின்னர் ஆனந்தகுமார் அந்த குழந்தையை தான் வளர்ப்பதாக கூறி கொண்டு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்றதாலும், வளர்க்க சிரமப்பட்டதாலும் குழந்தையை கொண்டு வந்து மருத்துவமனையில் அவர் விட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.

தந்தை கைது

இதைத்தொடர்ந்து போலீசார் குழந்தையின் தந்தை ஆனந்தகுமார், தாத்தா பெரியசாமி, உறவினர்கள் தர்ம பாண்டி, செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தவழக்கில் குழந்தையின் தந்தை ஆனந்தகுமார் (23) உறவினர் தர்மபாண்டி (25) 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட பெரியசாமி, செல்வம் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த குழந்தையை மதுரையிலுள்ள ஒரு மையத்தில் பராமரிப்புக்காக அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Next Story