ஊரடங்கால் மார்க்கெட் மூடல்: சம்பங்கி பூ விலை கடும் வீழ்ச்சி-சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்


ஊரடங்கால் மார்க்கெட் மூடல்: சம்பங்கி பூ விலை கடும் வீழ்ச்சி-சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Jun 2021 11:36 PM IST (Updated: 13 Jun 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் பூ மார்க்கெட் மூடப்பட்டதால் சம்பங்கி பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி சென்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கோவிலூர், பெரியாம்பட்டி, அடிலம், சிக்க திம்மனஅள்ளி, நாகனம்பட்டி, மொட்டலூர், திண்டல், கும்பாரஅள்ளி, முக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பூ சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் குண்டுமல்லி, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை பூ, அரளி உள்பட பல்வேறு பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு ஓசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க ஓசூர், பெங்களூரு, தர்மபுரி ஆகிய பகுதிகளில் பூ மார்க்கெட் மூடப்பட்டதால் பூக்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. இதன் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.80-க்கும், சன்னமல்லி ரூ.70-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் சம்பங்கி உள்ளிட்ட பூக்களை சாலையோரம் கொட்டி சென்றனர்.

இதனால் விவசாயிகள் பூக்களை பறித்து விவசாய நிலங்களில் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கால் பூ மார்க்கெட் மூடப்பட்டது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பூக்களை வாங்க முன்வருவது இல்லை. இதன் காரணமாக பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பறித்து விளை நிலங்கள், சாலையோரங்களில் டன் கணக்கில் கொட்டி வருகின்றனர் என கவலையுடன்தெரிவித்தார்.

Next Story