மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என போலீசார் கண்காணிக்க வேண்டும்-சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவு


மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என போலீசார் கண்காணிக்க வேண்டும்-சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2021 12:35 AM IST (Updated: 14 Jun 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையொட்டி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு காவல்துறை சார்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, ராஜி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (மதுவிலக்கு அமல் பிரிவு), முரளி (ஓசூர்) மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் டாஸ்மாக் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த 10-ந் தேதி முதல் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அரசின் உத்தரவுப்படி இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 121 டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபானம் வாங்க வருபவர்கள் 6 அடி இடைவெளி விட்டு கடையில் மது வாங்க வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள மைதானத்தில் ஒரு மணி நேரத்தில் 40 முதல் 50 பேர் மதுபாட்டில்களை வாங்க வசதியாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்தி விட்டு வர வேண்டும். கடைகளுக்கு அருகில் யாரும் மது அருந்த கூடாது.

சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளுக்கு அருகில் காவல் துறை ஒலிப்பெருக்கி அமைத்தும், 4 மற்றும் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொண்டும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று போலீசார் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story