தவறுதலாக விடுவிக்கப்பட்ட 2 கைதிகள் சிக்கினர்


தவறுதலாக விடுவிக்கப்பட்ட 2 கைதிகள் சிக்கினர்
x
தினத்தந்தி 14 Jun 2021 12:53 AM IST (Updated: 14 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட 2 கைதிகளை போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சிறை சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

தவறுதலாக விடுவிப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 24 பேர் ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், 3 பேர் அரியலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதில் 22 பேருக்கு நேற்று முன்தினம் அரியலூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகத்தினர் செய்தனர். அப்போது ஆங்கிலம் புரிதல் இல்லாத காரணத்தினால் கீழப்பழுவூர் அருகே உள்ள மலத்தான்குளத்தை சேர்ந்த வேளாங்கண்ணி ராபர்ட்(வயது 36), பாலகுமார்(22) ஆகியோரை தவிர்த்து என்பதை தவறுதலாக புரிந்து கொண்டு, அவர்களையும் சேர்த்து மொத்தம் 24 பேரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது கூடுதலாக 2 பேரை தவறுதலாக விடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி ராபர்ட், பாலகுமார் ஆகியோரை சிறை சூப்பிரண்டு நடராஜ் மற்றும் அரியலூர் போலீசார் உதவியுடன் வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், அவர்கள் 2 பேரும் கைகாட்டியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் நேற்று மாலை சோதனையிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேளாங்கண்ணி ராபர்ட், பாலகுமார் ஆகியோரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து, அரியலூர் சிறையில் அடைத்தனர்.
பணியிடை நீக்கம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் கிளை சிறை சூப்பிரண்டு நடராஜனிடம் திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு சதீஷ் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது நடராஜன் கொடுத்த பதிலில் திருப்தி அடையாததால், ஜெயங்கொண்டம் கிளை சிறை சூப்பிரண்டு நடராஜனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

Next Story