தென்காசியில் 70 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு; முககவசம் அணியாமல் வந்தால் மதுபானம் கிடையாது என அறிவிப்பு


தென்காசியில் 70 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு; முககவசம் அணியாமல் வந்தால் மதுபானம் கிடையாது என அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 1:24 AM IST (Updated: 14 Jun 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் இன்று 70 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணியாமல் வந்தால் மதுபானம் வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரி கூறியுள்ளார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் இன்று 70 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணியாமல் வந்தால் மதுபானம் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரி கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடை திறப்பு

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு ஊரடங்கு அறிவித்தது. பின்னர் இதில் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இன்று முதல் இந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை இன்று முதல் காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணி வரை செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 70 டாஸ்மாக் கடைகளும் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கடைகளின் முன் பகுதியிலும் வாடிக்கையாளர்கள் வரிசையில் சமூக இடைவெளியில் நின்று மதுபானங்களை வாங்கும் வகையில் கம்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல முடியும்.

முக கவசம் அவசியம்

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஷியாம் சுந்தர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியில் நிற்கும் வகையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வரிசையாக விற்பனை நடைபெறும். மேலும் ஒலிபெருக்கி மூலம் இதுபோன்ற கடைகளில் விதிமுறைகளை கூறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது. கடை ஊழியர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story