தொற்று குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறப்பு: முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்- சேலத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி


தொற்று குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறப்பு: முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்- சேலத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2021 3:58 AM IST (Updated: 14 Jun 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சேலம்:
கொரோனா தொற்று குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று அமைச்சர்  செந்தில்பாலாஜி கூறினார்.
தொற்றின் தாக்கம் உச்சம்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு நடவடிக்கையிலும் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுத்து வருகிறது. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அப்போது தேவையான ஆக்சிஜன் வசதி இல்லை. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் இல்லை. போதுமான அளவு பரிசோதனைகள் இல்லை.
1 மாத காலத்துக்குள் தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் என்று போர்க்கால அடிப்படையில் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி தேவையான அளவு ஆக்சிஜன் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. 
மதுபான கடைகள்
டாஸ்மாக் கடைகள் பற்றி ஒரு சிலரது கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. கடந்த 10.5.2021 அன்று மதுபான கடைகளை மூட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அப்போது கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் 14-ந்தேதி (இன்று) முதல் மதுபான கடைகள் திறக்கப்படுகிறது. கட்டாயம் முககவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.
நோய் தொற்றின் தாக்கம் அதிகம் இருந்திருந்தால் மதுபான கடைகளை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்க மாட்டார்.
அரசியலுக்காக ஆர்ப்பாட்டம்
தற்போது நோய் தொற்றின் தாக்கம் 8 சதவீதம் தான் உள்ளது. கடைகள் திறக்கப்படாத 11 மாவட்டங்களில் மதுவிற்பனை, கள்ள சந்தையில் மது விற்பனைக்கு அரசு அனுமதிக்காது. தமிழகத்தில் ஒரு சொட்டு கூட கள்ளச்சாராயம் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் சூழல் வந்து விடக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தால் மக்கள் மீது அக்கறை கொண்ட இயக்கம் என்று பா.ஜனதாவை சொல்லி இருக்கலாம். ஆனால் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. அரசியலுக்காக பா.ஜனதா இந்த நிலையை எடுத்து உள்ளது.
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
பேட்டியின் போது கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story