கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
பாதிப்பு குறைவு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடவில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தடுப்பூசி போடும் பணிகள்
இதனிடையே, சென்னையில் இருந்து 5,500 கோவேக்சின் தடுப்பூசிகள் சேலம் மாவட்டத்திற்கு வந்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும், 18,300 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கியது.
சேலம் குமாரசாமிப்பட்டியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்தனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். ஒரு சிலருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டது.
ஆர்வம்
ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் தயக்கம் இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதால் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
எனவே தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் வினியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story