கும்மிடிப்பூண்டி கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டியில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடியதால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. மேலும் முன்பதிவிற்கான டோக்கன் தீர்ந்ததால் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் பஜாரில் உள்ள புறக்காவல் நிலைய கட்டிடத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் வந்து காத்திருந்த பொதுமக்களுக்கு மட்டும் 100 டோக்கன்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் வழங்கினர்.
அதற்கு பிறகு வந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தடுப்பூசி முகாமிற்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
முகாமிற்கு வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்ற ஆர்வத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு சமூக இடைவெளியின்றி கூடியதால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர், ஒலி பெருக்கி மூலம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினர். மேலும், டோக்கன்களுக்கு ஏற்ப 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட உள்ளதாகவும் மற்றவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினர்.
இதனையடுத்து டோக்கன் தீர்ந்ததால், தடுப்பூசி முகாமிற்கு வந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இது போன்று தடுப்பூசி முகாம்களுக்கு ஆர்வத்துடன் வரும் பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை செலுத்த பேரூராட்சி நிர்வாகத்தினரும், சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story