எதிர் வீட்டு கேட்டில் ஏறி நின்றதை தட்டிக்கேட்டதால் தகராறு: வீடு புகுந்து துணை நடிகை-மகனுக்கு அடி-உதை போலீசில் புகார்
எதிர் வீட்டு கேட்டில் ஏறி நின்றதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து தன்னையும், மகனையும் அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக வளசரவாக்கம் போலீசில் துணை நடிகை புகார் செய்து உள்ளார்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு, ராதா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி (வயது 48). துணை நடிகையான இவர், ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் நடிகரும், நடன இயக்குனருமான தினேசுக்கு தாயாக நடித்து உள்ளார். மேலும் இவர் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சம்பவத்தன்று மர்மநபர்கள் சிலர், இவரது வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டின் கேட்டில் ஏறி நின்று புறாவை பிடிக்க முயன்றனர். பின்னர் அங்கிருந்து செல்ல முயன்ற அவர்களிடம், ‘எதற்காக இதுபோல் எதிர் வீட்டு கேட்டில் ஏறி நின்றீர்கள்?’ என பாண்டி லட்சுமியின் மகன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பாண்டி லட்சுமியின் மகனை தாக்கினர். அதை தடுக்க வந்த பாண்டி லட்சுமிக்கும், மர்மநபர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் நடிகை பாண்டி லட்சுமி அணிந்து இருந்த ‘டி-சர்ட்’ கிழிந்து போனது. அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களையும் காலால் எட்டி உதைத்தனர்.
அப்போது மர்மநபர்கள் வீடு புகுந்து தன்னையும், தனது மகனையும் சரமாரியாக அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை பாண்டி லட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story