கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வயதான தம்பதிகளிடம் ரூ.24 லட்சம் மோசடி
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வயதான தம்பதிகளிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 71). இவர், தனது மருத்துவ சிகிச்சைக்காக பம்மல் வ.உ.சி.நகர் ஆறுமுகம் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தனது மனைவி மீனாட்சி (70) உடன் தங்கி உள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.வயதான தங்களுக்கு உதவியாக இருக்க சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைசாமி (40) என்பவரை வீட்டு வேலைக்கு அமர்த்தினார்.
வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே குழந்தைசாமி நல்லவன்போல் நடித்து சுப்பிரமணியன் மனதில் இடம் பிடித்தார். இதனால் சுப்பிரமணியன், வீட்டு வேலையுடன் சேர்த்து தனது வங்கிக்கணக்கில் உள்ள வரவு-செலவு கணக்குகள் அனைத்தையும் குழந்தைசாமியையே பார்க்கச் சொன்னார்.
இந்த நிலையில் தனது வங்கி கணக்கில் இருந்து அதிக அளவில் பணம் திடீர் திடீரென வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக சுப்பிரமணியத்துக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், குழந்தைசாமியிடம் கேட்டார்.
அதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த குழந்தைசாமி, அதன்பிறகு கள்ளக்குறிச்சிக்கு தப்பி ஓடிவிட்டார். நல்லவன் போல் நடித்து தனது பணத்தை மோசடி செய்த குழந்தைசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி சங்கர் நகர் போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சியில் பதுங்கி இருந்த குழந்தைசாமியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் முதியவர் சுப்பிரமணியன் வங்கி கணக்கில் இருந்து ரூ.24 லட்சம் வரை திருடியதை ஒப்புக்கொண்டார். அந்த பணம் அனைத்தையும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து விட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story