திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட 2-வது நாளாக திரண்ட பொதுமக்கள்


திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட 2-வது நாளாக திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jun 2021 3:44 PM IST (Updated: 14 Jun 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் ெகாரோனா தடுப்பூசி ேபாட 2-வது நாளாக பொதுமக்கள் திரண்டனர். 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் தணியவில்ைல. ஒருநாளைக்கு பல ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் நோய் தொற்று குறையாத மாவட்டங்கள் என அரசு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தற்போது மக்களிடையே கொரோனாவுக்கு தடுப்புசி போட ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் தினசரி தடுப்பூசி மையங்களில் குவிந்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏமாற்றம்

இங்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடப்படவில்லை. நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கின. இதை அறிந்த பலர் அங்கு திரண்டனர். ஆனால் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதேபோல் நேற்று 2-வது நாளாக அங்கு தடுப்பூசி போடுவதற்கு மக்கள் திரண்டனர். இங்கு நேற்று 250 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அந்த எண்ணிக்கைக்கு அதிகமானோர் அங்கு திரண்டு, தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் திரண்டிருந்தவர்களின் பாதி பேர் ஏமாற்றம் அடைய நேரிட்டது.

கூடுதல் ஒதுக்கீடு

இதேபோல திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆனால் அங்கு 40 பேருக்கு மட்டுமே கோவிஷீல்டு தடுப்பூசி வந்ததாகவும், அது போடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு திரண்டு இருந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருவாரூர் மாவட்டத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story