திருவண்ணாமலையில் மான், முயல்களை வேட்டையாடிய வாலிபர் கைது
திருவண்ணாமலையில் மான், முயல்களை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
ரோந்து பணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் வனப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவண்ணாமலையை அடுத்த கொண்டம் காப்புக்காடு பகுதியில் வனவர்கள் கனகராஜ், முனுசாமி, வனகாப்பாளர்கள் அரவிந்த், கணபதி ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மான் வேட்டை
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையில் வேட்டையாடப்பட்ட மான் ஒன்று இருந்தது. அவர்களை வனத்துறையில் பிடிக்க முயன்றதில் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் சிக்கினார்.
அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் போளூர் அருகில் உள்ள பாடகத்தை அடுத்த துருகம் மலை பகுதியில் இருந்து ஒரு மான் மற்றும் 2 முயல்கள் வேட்டையாடியது தெரியவந்தது. மேலும் அவர் செங்கத்தை சேர்ந்த சஞ்ஜெய் (வயது 20) என்பதும், தப்பியோடியது கொண்டம் பகுதியை சேர்ந்த சூரியா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வேட்டையாடப்பட்ட மான், முயல்கள் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை வனச்சரகர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து சஞ்ஜெயை கைது செய்தார். தப்பியோடிய சூரியாவை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story