கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற வாலிபர் கைது
தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க வராத ஆத்திரத்தில், கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க வராத ஆத்திரத்தில், கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விவசாய கூலி தொழிலாளி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி அபிஷேககட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52).விவசாய கூலி தொழிலாளி.
இவரது மகன் பழனிவேல்(28). விவசாய கூலி தொழிலாளியான பழனிவேலின் மனைவி சூர்யாவுக்கு தலைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து 4 நாட்கள் ஆகிறது. நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனது மனைவியை பார்த்து விட்டு பழனிவேல் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
பிறந்த குழந்தையை பார்க்க வராததேன்?
பின்னர் ஊரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், தனது மகனிடம் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டேன். ஏன் தரவில்லை என கேட்டு சண்டை போட்டுள்ளார்.
அதற்கு பழனிவேல், முதன் முதலில் எனக்கு பிறந்த குழந்தையை பார்க்க வராத உனக்கு நான் ஏன் பணம் தர வேண்டும்? என்று கேட்டுள்ளார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
கழுத்தில் மிதித்து கொலை
இதில் ஆத்திரம் அடைந்த பழனிவேல், தனது தந்தை என்றும் பாராமல் ராஜேந்திரனை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் கீழே விழுந்த ராஜேந்திரனின் கழுத்தில் தனது காலை வைத்து மிதித்து உள்ளார். இதில் ராஜேந்திரன் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இது குறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story