திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் மதுப்பிரியர்கள் அதிகமாக சென்றனர்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் மதுப்பிரியர்கள் அதிகமாக சென்றனர்.
போடிப்பட்டி,
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் மதுப்பிரியர்கள் அதிகமாக சென்றனர்.
எல்லையில் இருக்கும் டாஸ்மாக்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத்தடுக்கும் விதமாக கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாத நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியான கொழுமம் சோதனைச்சாவடியையொட்டி திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. அதேபோல மாவட்ட எல்லைகளான சாமிநாதபுரம், பாப்பம்பட்டி பகுதிகளிலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதிகளில் அதிகாலை முதலே மதுப்பிரியர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை மறந்து கும்பல் கும்பலாக குவிந்த மதுப்பிரியர்களால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
குறுக்கு வழியில் படையெடுப்பு
இதனால் சோதனைச்சாவடிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் முன்பாகவே போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பு அனுப்பி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் குதிரையாற்றுப்பாலம் வழியாக நீண்ட தூரம் நடந்து சென்றால் சோதனைச் சாவடியைக் கடந்து விடலாம் என்று நினைத்து தங்களது முயற்சியை மேற்கொண்டனர். அப்படி சென்றவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி மாவட்ட எல்லையை கடக்க அனுமதிக்காததால் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே அருகிலுள்ள வாய்க்கால், வயல் வெளிகள் என்று பல்வேறு குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி நடந்தும், மோட்டார் சைக்கிள்கள் மூலமும் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தனர். இதனால்எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீசார் டோக்கன் வழங்கி அனைவரையும் வரிசையில் நிற்க வைத்தனர்.
பலநாள் தாகத்தை தீர்த்தனர்
டாஸ்மாக் திறந்ததும் உற்சாகமடைந்த மதுப்பிரியர்கள் லுங்கி, ஜெர்கின், பைகள் ஆகியவற்றில் ஏராளமான பாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல நாள் தாகம் என்பது போல ஒரு சிலர் பாட்டில்களை கையில் வாங்கி சில அடி தூரம் சென்றதும் அவசரம் அவசரமாக திறந்து குடித்தனர். மரத்தடி, வயல்வெளி, கார் என்று எல்லா இடங்களையும் பாராக மாற்றி மது குடித்தனர். இதனால் 2 மணி நேரத்தில் அனைத்து மது வகைகளும் விற்றுத்தீர்ந்தது. ஆனாலும் வீடு திரும்ப மனமில்லாமல் மாலை 5 மணிக்குள் மறுபடியும் சரக்கு வரும் என்று பலரும் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதுபோல மடத்துக்குளத்தையடுத்த சாமிநாதபுரம் டாஸ்மாக் மதுக்கடைக்கு மதுப்பிரியர்கள் பல்வேறு குறுக்கு வழிகளை பயன்படுத்தி சென்றதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
கொரோனா அபாயம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த சூழலில் மாவட்ட எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை என்று அனைத்து பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று மது வாங்குவதற்காக குவிந்தனர். இதேநிலை நீடித்தால் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை விதிக்கப்பட்ட ஊரடங்கு பயனற்றுப்போகும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட எல்லைகளில் உள்ள மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
Related Tags :
Next Story