கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் ரத்த தானம்


கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் ரத்த தானம்
x
தினத்தந்தி 14 Jun 2021 9:23 PM IST (Updated: 14 Jun 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் ரத்த தானம்

கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ரத்த தானம் செய்தனர்.

கலெக்டர், போலீஸ் அதிகாரிகள்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், கோவை நகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ரத்த தானம் செய்தனர்.

அப்போது, கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, மாநக ராட்சி சுகாதார அதிகாரி ராஜா. மற்றும் டாக்டர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ரத்ததானம் செய்த பின்னர் கலெக்டர் நாகராஜன் கூறியதாவது

ரத்த தான விழிப்புணர்வு

விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற ரத்தம் அவசியம். எனவே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி உலக ரத்ததான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு உலக ரத்ததான தினத்தின் கருப்பொருள் உதிரம் கொடுப்போம் உலகினை துடிப்புடன் வைத்திருப்போம் என்பதாகும்
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் ஆகியவை தன்னார்வ ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஆண்டில் ஆண்கள் 4 முறையும், பெண்கள் 3 முறையும் ரத்ததானம் செய்யலாம்.

உயிருக்கு போராட்டம்

கோவை மாவட்டத்தில் 4 அரசு ரத்த வங்கிகள், 17 தனியார் ரத்த வங்கிகள், 7 அரசு சேமிப்பு ரத்த மையங்கள் மற்றும் 1 அரசு ரத்த மூலக்கூறுகள் மையம் செயல்பட்டு வருகிறது. 

அறுவை சிகிச்சை மேற் கொள்பவர்கள், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், ரத்த பற்றாக்குறையுள்ள கர்ப்பிணி தாய்மார்கள், ரத்த தட்டு அணுக்கள் குறைந்தவர்கள் உள்பட பல நோயாளிகளின் உயிரை காப்பாற்ற ரத்தம் செலுத்த வேண்டியது அவசியம்.


18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண், பெண் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். 

ரத்த தானம் செய்ய 20 நிமிடம் போதுமானது. ரத்த கொடையாளரிடம் இருந்து சுமார் 300 மில்லி ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு யூனிட் ரத்தம் மூலம் 4 உயிர்களை காப்பாற்ற முடியும்.

தடுப்பூசி போட்டவர்கள்

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தன்னார்வ ரத்த கொடையாளர்கள், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன் ரத்த தானம் செய்யலாம். 

அவ்வாறு ரத்ததானம் செய்து கொண்டவர்கள் 3 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதுபோலவே கொரோனா தடுப்பூசி முதல்தவணை செலுத்திக்கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்.

பேரிடர் காலத்திலும் தன்னார்வ ரத்த தான கொடையாளர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணித்திட்ட பணி யாளர்கள், தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் மூலம் கடந்தாண்டில் 4 அரசு ரத்ததான மையங்களில் 10,925 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story