டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்


டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 14 Jun 2021 9:46 PM IST (Updated: 14 Jun 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. போலீஸ் பாதுகாப்புடன் மதுவிற்பனை நடந்தது.

தேனி: 


டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இந்த வைரஸ் பரவல் அதிகரித்ததால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

அதன்படி கடந்த மாதம் 10-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் பரிதவித்தனர். 

இந்த பரிதவிப்பை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுவிற்பனையில் சிலர் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாக தினமும் சிலர் கைது செய்யப்பட்டபடி இருந்தனர். மேலும், சிலர் சாராயம் காய்ச்சும் பணியிலும் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கினர். 

இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நோய் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

அலைமோதிய கூட்டம்
தேனி மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நேற்று திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மதுக்கடை திறக்கப்பட்டது. இருப்பினும் காலை 8 மணிக்கே மதுக்கடை அமைந்துள்ள இடங்களுக்கு மதுப்பிரியர்கள் வரத்தொடங்கினர். 

கடைகளின் முன்பு கூட்டம் அலைமோதியது. டொம்புச்சேரி, கொடுவிலார்பட்டி, தேவதானப்பட்டி, கம்பம், கடமலைக்குண்டு உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர். 

சிலர் மதுபான பாட்டில்களை கையில் வாங்கியதும் அதன்மேல் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கு 2 பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய அரசு அறிவுறுத்தி இருந்தது. 

ஆனால், பலரும் கை நிறைய மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மதுவாங்க வந்த பலரும் கைலி அணிந்து வந்தனர். பாட்டில்களை வாங்கி கைலிக்குள் போட்டுக் கொண்டனர். இதனால், கைலி பையாக மாறிவிட்டது.

பாதுகாப்பு
மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுபான பிரியர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைத்தும், முக கவசம் அணியச் சொல்லியும் போலீசார் அறிவுறுத்தினர். 

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மதுபானம் வாங்க வருபவர்கள் கையில் குடையுடன் வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு இருந்தார். 

ஆனால், குடையுடன் வந்தவர்களை பார்ப்பதே அரிதாக இருந்தது. கூடலூரில் மூதாட்டி ஒருவர் மதுபான கடைக்கு குடையுடன் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றார். அவரை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். 

காலையில் பல இடங்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், பிற்பகலில் பல டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story