பழைய பஸ்களின் கூண்டுகளை அகற்றக்கோரி போராட்டம்


பழைய பஸ்களின் கூண்டுகளை அகற்றக்கோரி போராட்டம்
x

பாரம்பரிய கடல் பகுதியில் இறக்கப்பட்டுள்ள பழைய பஸ்களின் கூண்டுகளை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமேசுவரம்,ஜூன்.
பாரம்பரிய கடல் பகுதியில் இறக்கப்பட்டுள்ள பழைய பஸ்களின் கூண்டுகளை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம்
ராமேசுவரம் மீன் பிடி டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வருகிற ஜூன் 30-ந் தேதிக்குப் பிறகு மீன் பிடிக்க செல்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு
உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அதிகமாக அன்னிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் மீன்பிடி தொழில் டீசல் விலை உயர்வால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உற்பத்தி விலையிலேயே மீனவர்களுக்கு டீசலை வழங்க வேண்டும்.
மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையிலும், மீன்பிடி தொழிலை நசுக்கும் வகையிலும் பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை அரசால் மிதக்க விடப்பட்டுள்ள பழைய பஸ்களின் கூண்டுகளை உடனடியாக அகற்றுவதற்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய பஸ் கூண்டுகளை அகற்ற வலியுறுத்தியும், டீசல் விலை உயர்வை கண்டித்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது, முதல் கட்டமாக நாளை (புதன்கிழமை) ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story