மீனவர்களின் ரேஷன் கார்டுகளை வறுமைக் கோட்டிற்கு கீழ் மாற்றி தரக்கோரி மனு
மீனவர்களின் ரேஷன் கார்டுகளைவறுமைக் கோட்டிற்கு கீழ் மாற்றி தரக்கோரி மனு
ராமநாதபுரம்,ஜூன்.
தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சி.ஐ.டி.யூ. மீனவ மகளிர் கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுடலைகாசி மற்றும் மீனவ பெண்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 130 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல், இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு காரணங்களினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். வருடத்திற்கு 100 நாட்கள் கடலுக்கு செல்வதே அரிதாகி வருகிறது. அரசு தரப்பில் மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 90 சதவீத மீனவர்களுக்கு ரேஷன் கார்டு முறையாக வழங்கப்படவில்லை.
அருகருகில் வசிக்கும் மீனவர்களில் ஒருவருக்கு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் என்றும் மற்றொருவர் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர் என்றும் பாரபட்சமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே விதமான சூழலில் மீன்பிடி தொழில் செய்து வருபவர்களுக்கு இவ்வாறு முரணான முறையில் ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மீனவர்களின் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து அவர்களின் வாழ்வாதார நிலையை கருதி அனைவருக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கார்டாக மாற்றி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story