ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை
ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 199.9 மீட்டர் நீளம் கொண்ட எம்.வி.பேக்அல்கோர் என்ற கப்பல் வந்தது. இந்த கப்பலில் ஹைட்ராலிக் பளுதூக்கி எந்திரங்கள் மற்றும் துறைமுகத்தின் நகரும் பளுதூக்கி எந்திரங்கள் மூலம் காற்றாலை இறகுகள் கையாளப்பட்டன. அப்போது ஒரே ஏற்றுமதியில் 77.50 மீட்டர் நீளம் கொண்ட 24 ராட்சத காற்றாலை இறகுகள் கையாண்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த இறகுகள் கப்பலில் மூன்று அடுக்குகளாக ஏற்றப்பட்டன. பின்னர் இந்த கப்பல் அமெரிக்காவில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. இதற்கு முன்பு 74.90 மீட்டர் நீளம் கொண்ட 84 காற்றாலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும் வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 4 ஆயிரத்து 462 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்கள் கையாளப்பட்டன. இந்த நிதியாண்டில் ஜூன் மாதம் வரை 423 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்கள் கையாளப்பட்டு உள்ளன.
வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்வதில் முதன்மை நுழைவாயில் துறைமுகமாக திகழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் துறைமுக அதிகாரிகள், கப்பல் முகவர்கள், தரைவழி தளவாட நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். காற்றாலை இறகுகள் ஏற்றுமதி அதிகரித்து வருவதால், இத்தகைய ஏற்றுமதியை மிகவும் கவனமுடன் வ.உ.சி. துறைமுகம் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story