தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடைகள், சலூன் கடைகள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று டீக்கடைகள், சலூன் கடைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி டாஸ்மாக், டீக்கடைகள், பூங்காக்கள், சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சலூன் கடைகள் சுமார் 2 வாரத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன. இதனால் நேற்று முன்தினம் சலூன் கடைகள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்து இருந்தனர். நேற்று அனைத்து சலூன் கடைகளும் திறக்கப்பட்டன. இங்கு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
இதேபோன்று சிறிய டீக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் இருந்து பொதுமக்கள் பார்சல் டீ வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பல கடைகளில் வழக்கம்போல் மக்கள் டீ குடித்து சென்றனர். அதே நேரத்தில் டீக்கடைகளில் கூட்டம் சேராத வகையில் கொரோனா விதிமுறைகளையும் கடைப்பிடித்தனர்.
அரசு சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இ-சேவை மையங்கள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முதல் இ-சேவை மையங்கள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் காலை முதல் மக்கள் இ-சேவை மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பல்வேறு சான்றிதழ், உதவித்தொகை பெற விண்ணப்பித்தனர்.
அதேபோன்று பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பூங்காக்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டு இருந்தன. இதில் மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டனர். நடைபயிற்சி நண்பர்களை சந்தித்த முதியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இந்த தளர்வுகள் மூலம் பெரும்பாலும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story