நாமக்கல்லில் மேற்கூரையை உடைத்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருட முயற்சி-தப்பி ஓடியபோது படுகாயம் அடைந்த சேலத்தை சேர்ந்தவர் சிக்கினார்


நாமக்கல்லில் மேற்கூரையை உடைத்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருட முயற்சி-தப்பி ஓடியபோது படுகாயம் அடைந்த சேலத்தை சேர்ந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:43 PM IST (Updated: 14 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்களை திருட முயன்ற சேலத்தை சேர்ந்தவர் தப்பியோடியபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

நாமக்கல்:
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சில டாஸ்மாக் கடைகளில் மர்ம நபர்கள் கதவை உடைத்தும், சுவரில் துளையிட்டும் மதுபாட்டில்களை திருடி சென்று விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் கடையில் பணியாளர்கள் சுழற்சி முறையில் இரவில் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாமக்கல் நல்லிபாளையம் தானிய சேமிப்பு கிடங்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அதன் விற்பனையாளர் சக்திவேல் (வயது 44) நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் ஈடுபட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு மதுபாட்டில்களின் சத்தம் கேட்டது. இதையடுத்து சக்திவேல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் இருந்த மேற்பார்வையாளர் கர்ணனை அழைத்து உள்ளார்.
படுகாயம்
பின்னர் இருவரும் கடையின் உள்ளே யார் இருக்கிறீர்கள்? என கேட்டுள்ளனர். அப்போது சிறிது நேரத்தில் கடையின் உள்ளே இருந்த மர்ம நபர் ஒருவர் மேற்கூரையான ஆஸ்பெட்டாஸ் அட்டை வழியாக வெளியே குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த மர்ம நபர் தலையில் அடிபட்டு படுகாயத்துடன் கிடந்தார்.
இதையடுத்து சக்திவேல் உடனடியாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அங்கு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுபாட்டில்களை திருட முயற்சி
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பதும், மதுபாட்டில்களை திருட கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற அவர், அங்கு ஒயின் பாட்டில் ஒன்றை எடுத்து குடித்து கொண்டு இருந்ததும், வெளியில் இருந்து சத்தம் கேட்டதால் மாட்டி கொள்வோம் என நினைத்து குதித்து தப்பிக்க முயன்றபோது படுகாயம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து விற்பனையாளர் சக்திவேல் நாமக்கல் போலீசில் புகார் செய்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story