திருச்சியில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: மதுப்பிரியர்களை தடுக்க மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
திருச்சியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையொட்டி அங்கு மதுப்பிரியர்கள் படையெடுப்பதை தடுக்க மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மோகனூர்:
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனிடையே நேற்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாமக்கல் மற்றும் அண்டை மாவட்டங்களான சேலம், கரூர், ஈரோடு ஆகியவற்றில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
வாகன சோதனை
எனினும், நாமக்கல் மாவட்டத்தின் மற்றொரு அண்டை மாவட்டமான திருச்சியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் காலை முதலே மதுப்பிரியர்கள் குவிந்தனர். மதுபாட்டில்களை வாங்கி செல்ல நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்களும் திருச்சிக்கு படையெடுத்தனர்.
மதுப்பிரியர்களின் படையெடுப்பை தடுக்க நாமக்கல் மாவட்ட போலீசார், மோகனூர் அருகே மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையான வடுகப்பட்டியில் சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலும், ஆண்டாபுரம் பகுதியில் மோகனூர் போலீசாரும் வாகன சோதனை நடத்தினர்.
வழக்கு
அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, டிரைவர்களிடம் உரிய விசாரணை நடத்திய பிறகே பயணத்தை தொடர அனுமதித்தனர். தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை திருப்பி அனுப்பினர்.
சோதனையின் போது திருச்சியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story