சேவல் சண்டையில் ஈடுபட்ட 12 பேர் கைது
தென்னிலை அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
க.பரமத்தி
சேவல் சண்டை
சேவல் சண்டை என்பது ஒருவிதமான போதை என்றே கூறலாம். சண்டை சேவல் வளர்ப்பில் நாட்டம் கொண்டவர்களை அதில் இருந்து விடுவிப்பது கடினம். மன்னர்களில் தொடங்கி, ஜமீன்தார்கள், பண்ணையார்கள், செல்வந்தர்கள், பாமரர்கள் என அனைத்து தரப்பிலும் சேவல் சண்டையை வெறித்தனமாக நேசிப்பவர்களாக உள்ளனர்.
நீண்ட நெடுங்காலமாக பரிசுப் பொருட்கள், பண முடிப்பு, கவுரவம் என்று இருந்த சேவல் சண்டையில் சூதாட்டம் கலந்தது. இதன் விளைவு சேவல் சண்டை நடக்கும் இடங்களில் மனிதர்களிடையே கைகலப்பு, அடி-தடி என தொடங்கி கொலை சம்பவங்கள் வரை சென்றுவிட்டது. இதனால், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தமிழ்நாடு போலீஸ் துறை தடை விதித்தது.
இந்த நிலையில் தென்னிலை அருகே மாலைக்கோவில் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக தென்னிலை போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
12 பேர் கைது
அப்போது அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட காட்டுபாளையத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ், கொக்காணிபாளையத்தை சேர்ந்த சசிக்குமார், மாலை கோவிலை சேர்ந்த அரவிந்த்(வயது 23), கரைபாளையத்தை சேர்ந்த சிவ சின்னத்தம்பி, சி.கூடலூரை சேர்ந்த ரஞ்சித், கரைவலசை சேர்ந்த ஆனந்த், குளித்தலை சின்னமநாயக்கனூரை சேர்ந்த சக்திவேல் ( 31), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளகோவில் கொங்கு நகரை சேர்ந்த மனோஜ்(27), மலையத்தாபாளையத்தை சேர்ந்த சுதாகர்(41), கோவில்பாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ், முத்தூர், குண்டுபுலிகாடு பகுதியை சேர்ந்த நந்தகுமார்(21), விக்னேஷ் (24) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து இறந்த நிலையில் இரண்டு சேவல் மற்றும் ரூ.ஆயிரத்து 770, 7 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story